"மண்டல பூஜையை" முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஐயப்பனுக்கு 108 விளக்கு பூஜை : பக்தி பரவசமடைந்த ஐயப்ப பக்தர்கள்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், அமைந்துள்ள சுவாமி ஐயப்பனுக்கு மண்டல பூஜை முன்னிட்டு, இன்று பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள்  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சந்தனம் மற்றும் பலவகையான வண்ண மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஐயப்பனுக்கு பூஜை செய்யப்பட்டு சிறப்பு தீபாதாரணை  நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து செண்டை மேளம் முழங்க ஐயப்பனின் வீதி உலா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது, பின்னர் திருக்கோவிலில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் சன்னதியில் வைக்கப்பட்டிருந்த 108 திருவிளக்குகளுக்கு ஐயப்ப பக்தர்கள் விளக்கேற்றி, பஜனை பாடல்கள் பாடி பக்தி பரவசத்துடன் மனமுருகி வழிபட்டனர். இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.