கோவில்பட்டியில் நடந்த அகில இந்திய ஹாக்கி இறுதி போட்டியில் இந்திய கப்பற்படை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், கே.ஆர். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. அகில இந்திய அளவில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. கடந்த 27-ம் தேதி காலிறுதியும், 29-ம் தேதி அரையிறுதிப் போட்டிகளும் நடந்தன.
இன்று மாலை 5 மணிக்கு 3, 4-வது இடங்களுக்கான போட்டி நடந்தது. போட்டியில் ஜலந்தர் ஆர்மி கிரீன் அணியும், பெங்களூரு சதர்ன் கமெண்ட் அணியும் மோதின. இதில், இரு அணிகளும் 2 - 2 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு, அதில் 4 - 3 என்ற (மொத்தம் 6 - 5) கோல் கணக்கில் ஜலந்தர் ஆர்மி கிரீன் அணி வெற்றிப் பெற்று 3-வது இடத்தை பிடித்தது. பெங்களூரு சதர்ன் கமெண்ட் அணி 4-வது இடத்தை பிடித்தது.
தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு இறுதி போட்டி நடந்தது. இதில், மும்பை இந்திய கப்பற்படை அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. இதில், இரு அணிகளும் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், 4 - 3 (மொத்தம் 5 - 4) என்ற கோல் கணக்கில் மும்பை இந்திய கப்பற்படை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்த மும்பை இந்திய கப்பற்படை அணிக்கு ரூ.2 லட்சம், 2-வது இடத்தை பிடித்த செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணிக்கு ரூ.1 லட்சம், 3-ம் இடத்தை பிடித்த ஜலந்தர் ஆர்மி கிரீன் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும், லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை வழங்கப்பட்டது. 4-வது இடம் பிடித்த பெங்களூரு சதர்ன் கமெண்ட் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற என்.முகமது ரியாஸ் பெங்களூரு எம்.இ.ஜி. அணியின் முன்னாள் தலைவர் சாம்சங் பர்னாண்டஸ் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கான ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.
மேலும், நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கோல்கீப்பர், தற்காப்பு மற்றும் நடுகள ஆட்டக்காரர்கள், முன்வரிசை வீரர், வளர்ந்து வரும் வீரர், மற்றும் போட்டியின் சிறந்த வீரர் ஆகியோருக்கு தனி நபர் விருதுகள் வழங்கப்பட்டன.