சரக்கு முறுக்கோடு பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி பொதுமக்கள், போலீசாரை மிரட்டியதாக கோவில்பட்டியில் 7 பேரை கைது செய்த போலீசார்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திரா நகர் பெருமாள் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு மருதுபாண்டியன் (29) என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரும் அவரது நண்பர்களும் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சரக்கு முறுக்கோடு பட்டா கத்தியால் கேக் வெட்டியதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, இந்திரா நகர் பெருமாள் கோயில் அருகே இளைஞர்கள் கும்பலாக நின்றிருந்தை பார்த்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மருதுபாண்டியுடன் இருந்த நடராஜபுரம் 1ஆவது தெருவினை சேர்ந்த ராமர் (19) அரிவாளை ஏந்தியவாறு இருந்து மட்டுமின்றி போலீசாரை அவதூறாகப் பேசியவாறு, தப்பியோட முயன்றதாக தெரிகிறது. அந்தக் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிந்து விசாரித்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்து வகையிலும், காவலர்களை மிரட்டும் வகையில் செயல்பட்டதாக மருதுபாண்டியன், அவரது நண்பர்கள் ராமர், பொன்பாண்டி (25), தினேஷ்குமார் (19), ராஜேஷ்குமார் (26), கார்த்திகேயன் (24), கவிபாரதி (19) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட மருதுபாண்டியன் மீது கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.