நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து தனியார் சோலார் நிறுவனம் மின்கம்பங்களை அமைப்பதாக குற்றச்சாட்டு - அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் நீரோடையில் இறங்கி தண்ணீரில் நின்று போராட்டம்- கோவில்பட்டி அருகே பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி ஊராட்சி பகுதியில் தனியார் சோலார் நிறுவனம் (ரென்ப்ரா) நீர் நிலை வழித்தடம், ஓடைகள் , அரசு நிலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்து உயர் மின் கம்பங்களை அமைத்து வருவதாகவும், இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி விவசாயிகள் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை இருப்பதால், சட்ட விதிமுறைகளை மீறி நீர்வரத்து பகுதி மற்றும் ஓடைகளில் ஆக்கிரமிப்பு செய்து உயர் மின்கம்பங்களை அமைத்து வரும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக்கிரமிப்பு செய்து நிறுவப்பட்ட உயிர் மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் சிவந்திபட்டி அருகே உள்ள நீரோடையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அதன் மாவட்ட செயலாளர் அருமைராஜ் தலைமையில் அந்த அமைப்பினர் இறங்கி, தண்ணீரில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இனியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஏது தொடர்பான அரசாணையை மாவட்ட ஆட்சியர் அல்லது சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.