கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலி கண் முன்னே காதலனுக்கு நேர்ந்த துயரம்- காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது.
கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சஞ்சய் (18), இவருக்கும் இவரது கிராமத்தின் அருகில் இருக்கும் கெச்சிலாபுரத்தை ஒரு பெண்ணிற்கும் காதல் இருந்துள்ளது. இதற்கு பெண்ணின் வீட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சஞ்சய் காதலித்த பெண்ணின் தந்தை குமார், அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் மற்றும் கனகலெட்சுமி ஆகியோர் அங்கு வந்து சஞ்சய்வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சஞ்சய்க்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மாரிமுத்துவுக்கு கத்தி பட்டு காயம் ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை குமார், சங்கரநாராயணன் மற்றும் மாரிமுத்து ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.