கோவில்பட்டியில் GO BACK மு.க.ஸ்டாலின் - கருப்பு பலூன்களை பறக்கவிட்டு,யார் அந்த சார் என்று கோஷங்கள் எழுப்பிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கைது!
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் - தமிழக அரசினை கண்டித்து அதிமுக சார்பில் கடந்த 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் இன்று நடைபெறும் என்று அதிமுக அறிவித்து இருந்தது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது,இந்தஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது, நடத்தக் கூடாது என்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அனுமதி மறுத்தனர்
இந்நிலையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தடையை மீறி முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் அதிமுகவினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு GO BACK முதல்வர் மு.க.ஸ்டாலின் - யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டையாபுரம், கோவில்பட்டி,கயத்தாறு, கழுகுமலை,கடம்பூர், புதூர்,நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.