கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஜாதியை சுட்டிக்காட்டும் வகையில் பனியன்களை அணியக்கூடாது, தலையில் ரிப்பன் அணியக்கூடாது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் தேர் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமை வகித்தார். கூட்டத்தில் கம்மவார் சங்க துணைத் தலைவர் பட்டுராஜன், செயலர் அழகர்சாமி, பொருளாளர் என். ராதாகிருஷ்ணன், செண்பகவல்லி அம்மன் கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தலைமை எழுத்தர் மாரியப்பன் உள்பட கம்மவார் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இம்மாதம் 13ஆம் தேதி கம்மவார் சங்கம் சார்பில் நடைபெறும் தேர் திருவிழாவில், ஜாதியை சுட்டிக்காட்டும் வகையில் பனியன்களை அணியக்கூடாது, தலையில் ரிப்பன் அணியக்கூடாது, மதுஅருந்திய நிலையில் விழாவில் பங்கேற்கக்கூடாது. அரசியல் சம்பந்தமான பேச்சுக்களையோ, கொடிகளையோ பயன்படுத்தக்கூடாது. தேர்திருவிழா மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற கோயில் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையுடன் இணைந்து தேர்த்திருவிழா மண்டகப்படிதாரர்கள் ஒத்துழைக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் உங்களின் தேவைகள் குறித்தும் தெரிவித்தால் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக தேர்தடி முறைதாரர்களான மூப்பன்பட்டி வீரபாண்டியன் தலைமையிலான குழுவினருடனும் போலீசார் ஆலோசனை நடத்தினார்,தேர் திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.