கோவில்பட்டியில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக ஜனவரி மாதம் முழுவதும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்,, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, பாதுகாப்பான சாலை பயணம் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் முன்னிலை வகித்தார்.கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் தொடங்கிய பேரணி புது ரோடு, கடலையூர் சாலை வழியாக வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் திரளான இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.