பாப்பா சின்ட்ரோம் (Papa Syndrome) அரிய மரபணு வகை நோயினால் பாதம் முதல் உச்சி வரை காயங்களுடன் ஒவ்வொரு நாளும் வலியுடன் அவதிப்பட்டு வரும் சிறுமி.
மருத்துவ உதவி கிடைக்காமல் பரிதவிப்பு -அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பெற்றோர்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுகிராமம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர். திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதிலட்சுமி, கோவில்பட்டியில் கூலி வேலை செய்து வருகிறார் .இந்த தம்பதியின் மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார். 2வது மகன் கணேஷ், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 17வது வயதில் கணேஷ் உயிரிழந்தார்.
3வது மகளின் பெயர் செண்பகவல்லி(17). கடந்த கல்வியாண்டில் பிளஸ்2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் பிறந்ததில் இருந்தே, இவரது உடலில் அங்கங்கு வீக்கம், புண் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களது மகளை பல்வேறு மருத்துவமனைகளில் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒவ்வொரு காரணங்களை சொன்னார்களே தவிர, இது என்ன நோய், எதனால் இப்படி உடலில் புண் வருகிறது, இதனை சரி செய்வது எப்படி என்பதை எந்த மருத்துவமனையிலும் சொல்லவில்லை.
மருத்துவர்கள் கொடுத்த வைத்தியமும், மருந்து, மாத்திரைகளும் செண்பகவல்லி உடலில் உள்ள புண்ணை சரியாக்கவில்லை. மாறாக, அவரது உடலில் வீக்கங்களும், புண்களும் அதிகரித்தன. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலின் பல்வேறு இடங்களில் புண்கள் ஏற்பட்டன. அந்த புண்களில் இருந்து திடீர் திடீரென அதிகளவு ரத்தம் வெளியேறியது. ரத்தம் வெளியேறும் போதெல்லாம் அந்த அப்பாவி சிறுமிக்கு நரக வேதனையாக இருந்துள்ளது. காலை, மாலை, நடுராத்திரி என திடீர் திடீரென அந்த சிறுமி வலியால் கதறி துடிப்பார், அதைக் கேட்கும்போது எங்களுக்கே பரிதாபமாக இருக்கும் என அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
பிறந்ததில் இருந்தே மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கிய பெற்றோரிடம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மருத்துவர் உங்கள் மகளுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது, அதனால்தான் உடலில் இப்படி புண்கள் ஏற்படுகின்றன, சர்க்கரை நோய் அதிகமாக இருப்பதால்தான் அந்த புண்கள் ஆறாமல் அப்படியே உள்ளது எனக்கூறியுள்ளார். அதனால், சிறுமி செண்பகவல்லி, கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கான சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால் அப்போதும் உடலில் உள்ள புண்கள் ஆறவே இல்லை. ரத்தம் கசிந்து வெளியேறுவதும் குறைந்தபாடில்லை. தினம் தினம் அனுபவித்து வந்த நரக வேதனையும் முடிவுக்கு வரவில்லை.
நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி, சங்கர், தனது மகளை 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் சிஎம்சி., ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குதான், பாப்பா சின்ட்ரோம் (Papa Syndrome) என்ற அரிய மரபணு வகை நோயினால் சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நோய் பல கோடி மக்களில் ஒருவருக்குத்தான் ஏற்படும் என மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், இந்த நோயை பூரணமாக குணப்படுத்துவதற்கான மருந்து, மாத்திரைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், டெல்லியில் உள்ள ஒரே ஒரு மருத்துவமனையில் மட்டும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அங்கு சென்று வைத்தியம் பார்த்தால் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும், பாதிப்பு மேலும் அதிகமாகாமல் இருப்பதற்காவது முயற்சிக்கலாம் என ஒருசில மருத்துவர்கள், சங்கரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சிறுமியின் தந்தை சங்கர் கூறுகையில், எனது மகள் பிறந்ததில் இருந்தே உடலில் அங்கங்கு பெரியளவில் புண்கள் ஏற்படும். அதிலிருந்து அடிக்கடி ரத்தம் வெளியேறும். அப்போதெல்லாம் என் மகள் வலியால் கதறி துடிப்பார். ஒரு தந்தையாக அதனை நேரில் பார்க்கும்போது என் இதயமே நொறுங்கி போய்விடும். எனது மகளை அழைத்துக் கொண்டு ஏறாத மருத்துவமனை இல்லை, பார்க்காத வைத்தியம் இல்லை. 17 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தாலும், 2 ஆண்டுகளுக்கு முன்புதான், என் மகள் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதையே கண்டுபிடிக்க முடிந்தது. அந்த நோயை சரி செய்வதற்கும் மருந்து, மாத்திரைகள் இல்லை என கூறுகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும், "நாங்களும் இருக்கிறோம்" என்ற தன்னார்வ அமைப்பை நாங்கள் தொடர்பு கொண்டோம். கடந்த சில மாதங்களாக அவர்கள்தான் எங்களுக்கு உதவி செய்கிறார்கள். எங்களுக்கு அரசின் உதவி கிடைக்க அவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
என் மகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தால் ஓரளவு குணப்படுத்தலாம் என கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு அந்தளவுக்கு வசதி இல்லை. நானும், என் மனைவியும் கூலி வேலைதான் பார்க்கிறோம். தயவு செய்து, அரசும், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரும் எங்களுக்கு உதவிக்கரம் நீட்டினால்தான் என் மகளை காப்பாற்ற முடியும், என்றார்.