"மக்களை காப்பாற்றும் அவதாரப்புருஷனா உதயநிதி... முன்னிலைப்படுத்த வேண்டிய நேரமா இது?" - கமுதி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டி என்ற கிராமத்தில் கமுதி மேற்கு ஒன்றிய அதிமுகவினர் சார்பில், கழக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கட்சியினர் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில்,
வடக்கு கிழக்கு பருவ மழை தீவிரமடையும் பெய்து வரும் இந்த சூழ்நிலையில் உதயநிதியை முன்னிலைப் படுத்த வேண்டிய நேரமா இது? என்றும், அவர் என்ன மக்களை காப்பாற்ற போகும் அவதாரப்புருஷனா..? என்று கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் ஆளுங்கட்சியினர் பருவ மழையை எதிர்கொள்ள போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும், அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை கொடுப்பதால் எந்த பலனும் இல்லை என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கிட்டத்தட்ட 60% நீர் நிலைகள் காய்ந்து வறண்டுள்ள நிலையில் அதனை முறையாக தூர்வாரப்படாதால், முறையான நீர் மேலாண்மை திட்டம் இல்லாததால் மழைநீர் வீணாக கடலுக்கு செல்கிறது என கூறினார். மேலும், இது பேரிடர் காலம், இப்போது
வீர வசனம் பேச இது ஒன்றும் கிரிக்கெட் மைதானம் அல்ல...புயலை எதிர்கொள்ள வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, உள்ளாட்சித் துறை, மருத்துவத்துறை, மின்சாரத்துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தமிழக கடற்கரையோர 13 மாவட்டங்களை கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதுபோன்ற பேரிடர் காலத்திலாவது மக்களின் பாதுகாப்பு கருதி எதிர்க்கட்சி செல்லும் கோரிக்கையை உள்வாங்கி செயல்பட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.