கமுதியில் தினசரி 1 லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்:கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலம் தொடங்கிய உடனே.. கூடவே குடிநீர் தட்டுப்பாடும் தொடங்க ஆரம்பித்து விடுகிறது.
குடிநீருக்காக பொதுமக்கள் தள்ளு வண்டிகளில் இரண்டு, மூன்று கிலோ மீட்டர் என கிழக்கு கடற்கரை சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் குடங்களை அள்ளிக்கொண்டு நடையை கட்டும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர்.
பருவமழையும் இந்த மூன்று தாலுகாக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதால், இங்குள்ள கண்மாய், குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி காய்ந்து உள்ளது.
மேலும் இந்த பகுதி மக்களின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த குண்டாறு, மலட்டாறு, கிருதுமால்நதி ஆகியவை பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.
இந்நிலையில் மாதத்திற்கு இரண்டு மூன்று முறை மாவட்ட நிர்வாகத்தால் விநியோகிக்கப்படும் காவிரி கூட்டு குடிநீர் தண்ணீரை குடங்கலில் பிடித்து சேமித்து வைத்து, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேற்கண்ட தாலுகாக்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் டிராக்டர்கள் தண்ணீர் லாரிகளில் தினசரி ஒரு குடம் தண்ணீர் ரூபாய் 5 முதல் 10 வரை விலை கொடுத்து வாங்கி குடிக்கவும் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது கமுதி பகுதியில் கோட்டைமேடு, அரசு ஐடிஐ, ஒற்றைக் கண் பாலம் மற்றும் முதுகுளத்தூர் செல்லும் வழியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அரசு ஐடிஐ வளாகத்திற்குள் புகுந்த காவிரி கூட்டு குடிநீர் வகுப்பறை கட்டிடங்களை சூழ்ந்துள்ளது.
மேலும் அருகில் உள்ள கல்லூரி மாணவிகள் விடுதி ஆகியவற்றை காவிரி கூட்டு குடிநீர் சூழ்ந்து மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. முதுகுளத்தூரில் இருந்து கமுதி வரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட காவிரி குடிநீர் குழாய் பல இடங்களில் சேதம் அடைந்து தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருவது தொடர் கதையாக உள்ளது.
தற்போது பல லட்சம் லிட்டர் தண்ணீர் கடந்த 10 நாட்களாக வீணாகி சாலையோர பள்ளங்களில் தேங்கி நிற்கிறது.ஒருபுறம் பொதுமக்கள் தண்ணீருக்காக அல்லல் படும் நிலையும், மற்றொருபுறம் இயற்கையும் பொதுமக்களுக்கு சாதகமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் அரசு சம்பளம் பெற்றுக் கொண்டு அவ்வழியாக நாள்தோறும் செல்லும் அரசு அதிகாரிகள் 10 நாட்களாக குழாய் உடைப்பை சீரமைக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் குழாய் உடைப்பு பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு அவ்வப்போது வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த குழாய் உடைப்புகளை முறையாக செய்யாமல் அரைகுறையாக மேற்கொள்வதாக புகார் எழுந்துள்ளது.