விளாத்திகுளம் இளைஞரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெரு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி - அன்னபூரணி தம்பதியினரின் மகனான மாரிமுத்து(28) சென்னையில் ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சொந்த ஊரான விளாத்திகுளத்திற்கு வந்திருந்த போது நண்பர்களுடன் வேனில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இவருக்கும் - அதே பகுதியைச் சேர்ந்த டிரைவரான சுயம்புலிங்கம் மற்றும் டி.வி மெக்கானிக்கான சதிஷ்குமாருக்கும் வேனில் ஆடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை நடந்துள்ளது. இதையடுத்து உடனிருந்த நண்பர்கள் சமாதானம் செய்துள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து சுற்றுலா செல்லும்போது வேனில் ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு 20.05.2018 அன்று இரவு 11 மணி அளவில் சாலையம் தெருவில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் அருகில் மாரிமுத்துவை சுயம்புலிங்கம் மற்றும் சதீஷ்குமார் இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரையும் விளாத்திகுளம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று(18.06.2024) தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றவாளிகளான சுயம்பு லிங்கம் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி தாண்டவன் தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.