தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் மழையினால் முற்றிலுமாக பாதிப்படைந்த மானாவாரி பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.8500 வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை திரும்பப்பெற்று மறுபரிசீலனை செய்து ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேருந்து நிலையம் முன்பு புதூர் வட்டார கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது;

* விளாத்திகுளம், புதூர், எட்டையபுரம் பகுதிகளில் சேதமடைந்த மானாவாரிப் பயிர்களை உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும்.

* கூட்டுறவு கடன் சங்க மற்றும் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

* 2022-2023 ஆண்டுக்கான பயிர் காப்பீடு மற்றும் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.

* மழையினால் உயிரிழந்த ஆடும் ஆண்டவர் கிட்ட கால்நடைகளுக்கு விரைந்து நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

* புதூர் - காடல்குடி குரு வட்டம் உள்ள அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வேண்டும். 

- உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அதிகப்படியான விவசாயிகள் குவிந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.