"மீடியாவுக்கு போவிங்களோ..! - அரசுப் பள்ளி பெண் தலைமை ஆசிரியரை மிரட்டிய எஸ்.ஐ" : புதூர் காவல்துறை நடுநிலையாக செயல்படவில்லை என பகிரங்க குற்றச்சாட்டு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த பியூலா ஜெபராணி (58) என்பவர் கழுகாசலபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பல ஆண்டுகளாக தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புதூரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் 2 மகன்களுடன் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தனக்குச் சொந்தமான சுமார் 19 சென்ட் (800 ச.மீ) பரப்பளவு கொண்ட வீடு மற்றும் இடத்தை  பார்த்திபன், பாண்டிச்செல்வம் ஆகிய நபர்கள் போலி பட்டாவை தயார் செய்து கொண்டு தங்களது இடம் என்று கூறி தொடர்ந்து அராஜகம் செய்து வருவதாகவும், கடந்தாண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்து தன்னை தாக்கியதோடு மட்டுமின்றி, தான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும் இதுசம்பந்தமாக புதூர் காவல் நிலையம் முதல் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகம் வரை என பல புகார்கள் அளித்தும் காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெண் தலைமை ஆசிரியர் பியூலா ஜெபராணி கண்ணீர் மல்க பத்திரிகை மற்றும் தொலைகாட்சி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த நிலையில், CCTV ஆதாரங்களுடன் இது தொடர்பான செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து கணவரின்றி மகன்களுடன் தனியாக வாழ்ந்து வரும் அரசு பள்ளி பெண் தலைமை ஆசிரியரிடம், புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாராயணன், "மீடியாவுக்கு போவிங்களோ... மீடியாவுக்கு..." என்று கூறி காவல் துறைக்கு எதிராக எப்படி செய்தி கொடுக்கலாம் என்று மிரட்டியதாகவும், தான் குடியிருந்து வரும் வீட்டிற்கு கதவு போட விடாமல் இடையூறு செய்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண் தலைமை ஆசிரியர். 


தனது இடத்திற்கு போலியாக பட்டா உற்பத்தி செய்து பொய்யாக நில உரிமைக்கோறும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் புதூர் 

காவல் நிலைய போலீசாரிடம் உரிய நத்தம் நிலவரித்திட்ட ஆவணங்கள் மற்றும் CCTV காட்சி ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து ஒருதலை பட்சமாக செயல்பட்டு தன் மீதும், தனது மகன்கள் மீதும் பல வழக்குகள் பதிவு செய்து துன்புறுத்துவதால் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மீது குற்றச்சாட்டு கூறுவதோடு தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பியூலா ஜெபராணி.