"பெற்றோர்களை பாதுகாப்பது நமது கடமை என்று சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்" - நாகலாபுரத்தில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில், அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு! 



"சர்வதேச முதியோர் தினத்தை" முன்னிட்டு தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில், இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் அமைந்துள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், கூடுதல் ஆட்சியர் ஜஸ்வர்யா உட்பட சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு பாட்டுப் போட்டி நடத்தப்பட்டதில், ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டு பாடல்கள் பாடிய முதியவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து பேசிய தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன், "நமது பெற்றோரை பாதுகாப்பது நமது ஒவ்வொருவருடைய கடமை, மாமனார்-மாமியாராக இருந்தாலும் சரி.. பெற்றோர்களாக இருந்தாலும் சரி அவர்களை பாதுகாப்பது நமது கடமை என்பதை சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு சொல்லி சொல்லி வளர்த்திட வேண்டும். தற்போதைய தலைமுறையினர் "நாம்" என்பதை மறந்து "நான்...நான்" என்றே உருவாகிக் கொண்டு வருகின்றனர். சமுதாய மத்தியில் முதியோரை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்பதை உணர்த்தி வளர்த்திட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்று கூறினார்.