விளாத்திகுளம் அருகே கடலில் குளித்துக்கொண்ட போது அலையில் சிக்கிய 5 பெண்கள் - கல்லூரி மாணவி உட்பட 2 பேர் பலி : 3 பேருக்கு சிகிச்சை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாக்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அங்குள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த போது 5 பெண்கள் கடலில் அலையில் சிக்கி நீரில் மூழ்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3 பேருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் தற்போது மதுரையில் தொழில் செய்து கொண்டு அங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 15-ம் தேதி இவர்கள் மதுரையில் இருந்து கோவில் திருவிழாற்காக தங்களது சொந்த ஊரான பெரியசாமிபுரம் கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். நேற்றைய தினம் திருவிழா முடிந்த நிலையில் இன்று அக்குடும்பத்தினர் அனைவரும் அங்குள்ள பெரியசாமிபுரம் கடலுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். இவர் குளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென இலக்கியா(21), கன்னியம்மாள் (50), அனிதா(29), சுவேதா(22) மற்றும் முருகலட்சுமி(39) ஆகிய 5 பெண்கள் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கி தவித்துள்ளனர். இதனைக் கண்ட அவர்களது உறவினர்கள் கடல் அலையில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்ற நிலையில் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் கல்லூரி மாணவி இலக்கியா மற்றும் கன்னியம்மாள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கிய மற்ற 3 பேரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் தற்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவலறிந்த வேம்பார் கடலோர காவல் படை போலீசார் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவி இலக்கியா மற்றும் கன்னியம்மாள் ஆகிய இருவரின் உடல்களை பிரத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்து வந்து கடலில் குளித்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.