விளாத்திகுளம் அருகே பைக்திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது : 50 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று திருடர்களை கைது செய்த போலீசார்!


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள குருவாடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் விக்னேஸ்வரன் (27) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலைக்கரை கிராமத்தில் ஆட்டுக்கிடை வைத்து தொழில் செய்து வருகிறார், இந்நிலையில் ஆடுகளுக்கு மருந்து வாங்குவதற்காக தனது பல்சர் (Pulsar) இருசக்கர வாகனத்தில் எட்டையாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது,  தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலை துரைசாமிபுரம் விளக்கு அருகே RN 5 இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் விக்னேஸ்வரனை தாக்கி அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.


இதனை அடுத்து விக்னேஸ்வரன் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த எட்டையாபுரம் போலீசார் பைக் திருடிய 3 பேரையும் அப்பகுதியில் தீவிரமாக தேடி வந்தனர்.


தாப்பாத்தி காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த திருடர்கள் போலீசார் தேடுவதை அறிந்து, திருடர்கள் திருடிய பைக்குகளுடன் மின்னல் வேகத்தில் தூத்துக்குடியை நோக்கி 120 கிலோமீட்டர் வேகத்தில் மின்னலாய் பறந்து சென்றனர்.

இதனை அடுத்து எட்டையாபுரம் ஆய்வாளர் முருகன் மற்றும் காவல் நிலைய போலீசார்கள் திருடர்களை பின் தொடர்ந்தது மட்டுமல்லாமல் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை எண் 100 க்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து எட்டையாபுரம் காவல் நிலையம் அருகே எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் பேரிகார்ட் தடுப்புகள் அமைத்து திருடர்களை  நிறுத்திய போது, பேரி கார்டுகளையும் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து குறுக்குச்சாலை - விளாத்திகுளம்- ஓட்டப்பிடாரம் சந்திப்பு சாலையில் மிகப்பெரிய தடுப்புகள் அமைத்து திருடர்கள் மூன்று பேரையும் பிடிக்க முயன்றுள்ளனர்.

அதில் இருவர் மாட்டிக்கொண்ட நிலையில் ஒருவர் மட்டும் தப்பி ஓடி உள்ளான். இதனை அடுத்து பைக்திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் தூத்துக்குடி TMB காலனி 4 வது தெரு லட்சுமி என்பவரின் மகன் செல்வகுமார் (20) அதே பகுதியை சேர்ந்த குட்டியப்பன் என்பவரின்  மகன் சுரேஷ்(19), மற்றும் சாமுவேல் (24) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பைக்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதில் செல்வகுமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைதான நிலையில் சாமுவேல் மதுரைக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

பைக்திருட்டில் ஈடுபட்டு மின்னல் வேகத்தில் தேசிய நெடுஞ்சாலை சென்ற திருடர்களை 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று பிடித்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு பாராட்டுக்கள் பொது மக்களிடமிருந்து குவிந்து வருகின்றன.

அதேபோல் தப்பி ஓடிய சாமுவேல் என்பவரை எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.