விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு "பாதுகாப்பான தீபாவளி" எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!



இந்தியா முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீப ஒளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது.  தீப ஒளி திருநாள் அன்று மக்கள் அனைவரும்,  புத்தாடை அணிந்து, தங்களின் இல்லத்தில் செய்த பலகாரங்களை வைத்து, தீபமேற்றி கடவுளை வழிபட்டு நண்பர்கள், உறவினர்களுக்கு வீட்டில் சமைத்த பலகாரங்களை அளித்து மகிழ்ந்து தீபத் திருநாளை, தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இந்நன்னாளில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவதுதான் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு பட்டாசு வெடிப்பதில் ஏற்படும் அஜாக்கிரதையினால் ஏராளமான விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற வெடி விபத்துக்கள் நிகழக்கூடாது என்பதை கருத்திற்கொண்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவனமுடன் பட்டாசுக்கள் வெடித்து பாதுகாப்பான முறையில் தீபாவளி திருநாளை கொண்டாடும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.


இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் திரு. மு.சங்கரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் நாகலாபுரம் எஸ்.கே.கே. இந்து உயர்நிலைப் பள்ளி மற்றும் புதூர் இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களிடையே கவனமாக பட்டாசு வெடிப்பது குறித்தும், பட்டாசுகள் வெடிப்பின் போது தீ விபத்து ஏற்பட்டால் அதை அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்வது குறித்தும் விளக்கமளித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், தீயணைப்பு துறை வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.