விளாத்திகுளம்
பகுதி இளைஞரிடம் ரூபாய்.55,50,000 பண மோசடியில் ஈடுபட்ட குஜராத் இளைஞர்கள் இருவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் டெலிகிராம்- ல் (Telegram App) Online job மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற செய்தியை அனுப்பி அதில் அவர்கள் கூறிய L&T construction sites and buildings க்கு ரிவ்யூ (Review)கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மேற்படி நபர், மர்ம நபர்கள் கூறியபடி ரிவ்யூ கொடுத்து சிறிதளவு பணத்தையும் ஈட்டியுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர்கள் மேற்படி நபரை தொடர்ந்து தொடர்பு கொண்டு www.intecct.net என்ற இணையதளத்தில் முதலீடு செய்வதன் மூலமாகவும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர். அதனை நம்பி மேற்படி நபர், மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு பணம் அனுப்பும் செயலிகள் மற்றும் வங்கியின் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய் 55,49,916/- பணத்தை முதலீடு செய்துள்ளார்.
பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி நபர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர்களான சந்திரேஷ் பாய் ரவிஜ்பூ மகன் ஜேய் சவாலியா (24) மற்றும் அசோக் பாய் மகன் மிலப் தக்கர் (22) ஆகியோர் மேற்படி நபரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் கடந்த 23.07.2024 அன்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைத்து மேற்படி 2 மோசடி எதிரிகளையும் கைது செய்து சூரத் நகர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு Transit Warrant பெற்று பின்னர் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு இன்று (26.07.2024) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.