விளாத்திகுளத்தில் த.வெ.க மாவட்ட செயலாளருக்கு அமோக வரவேற்பு - பட்டாசுகள் வெடித்து கட்சியினர் உற்சாகம்...!



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்டம், தொகுதி மற்றும் ஒன்றிய அளவில் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை நியமனம் செய்து பெயர் பட்டியலை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் த.வெ.க கட்சியினரிடையே, நிர்வாகிகள் அறிமுகக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டம் சார்பில் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் வடகிழக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரனுக்கு கட்சியினர் ட்ரம்ஸ் வாத்தியங்கள் முழங்க... பட்டாசுகள் வெடித்தும், மலர்கள் தூவியும் அமோக வரவேற்பளித்தனர்.

பின்னர் கட்சியினரிடம் பேசிய மாவட்ட செயலாளர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை கட்சியினரிடைய அறிமுகம் செய்து நிர்வாகிகளுடன் இணைந்து முழு ஒத்துழைப்புடன் கட்சி பணியாற்ற வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் காசிராம், பொருளாளர் பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் எபனேசர், முருகேஸ்வரி உள்ளிட்ட சுமார் 400க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.