நாளை பொங்கல் பண்டிகை - புகழ்பெற்ற எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் சிறப்பு சந்தை - வியாபாரிகள் வரத்து குறைவால் விற்பனை மந்தம்!
கடந்த சனிக்கிழமை 9 கோடிக்கு ஆடுகள் விற்பனையான நிலையில் இன்று ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை:ஆட்டுக்கிடாய்களின் விளையும் வீழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும். திருநெல்வேலி, மதுரை, திருச்சி , தேனி, மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்கவியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடிவரை விற்பனை நடைபெறும்.
ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில்ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி வரை விற்பனை நடைபெறும்.
கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. குறிப்பாக ஆட்டுக்கிடாய்கள் விலையும் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதன்கிழமை (இன்று) சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை வியாபாரம் களை கட்டியதால் இன்று மந்தமாகவே காணப்பட்டது. ஆடுகளை வாங்க வெளியூர் வியாபாரிகள் குறைவாக தான் வந்திருந்தனர். உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் தான் அதிகமாக காணப்பட்டனர். ஆனால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் விலை குறைவாக காணப்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 1300வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் , இன்று ரூ.950ஆக இருந்தது. கடந்த வாரம் பத்து கிலோ எடை கொண்ட ஆட்டுக்கிடாய் 15 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் இன்று ரூ. 11 ஆயிரமாக இருந்தது. ஆடுகள் வரத்தும் குறைவாக இருந்தது. வியாபாரிகளும் குறைவாக இருந்ததால் எதிர்பார்த்த விற்பனை இல்லை. சுமார் 1கோடியே 50 லட்ச ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.