விளாத்திகுளம் அருகே அருள்மிகு ஸ்ரீ பவானீஸ்வரர் உடனுறை பார்வதி அம்மாள் திருக்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற "திருக்குடமுழுக்குப் பெருவிழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே முத்துலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பவானீஸ்வரர் உடனுறை பார்வதி அம்மாள் திருக்கோவிலின் "புனருத்தாரண அஷ்டபந்தன திருக்குடமுழுக்குப் பெருவிழா" இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி அளவில் கோவிலின் நடை திறக்கப்பட்டு மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது திருமுறை பாராயணம், நான்காம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து காலை 9 மணி அளவில் நாடி சந்தனம், ஸ்பர்ஸாஹுதி, பிம்பாஹுதி, திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி உள்ளட்ட பூஜைகள் செய்து யாகசாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட தீர்த்த குடங்கள் கோவில் பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி-அம்பாள் விமானம் மற்றும் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கு புனிதநீரால் கும்ப அபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் இந்த பரிகார மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், திருநீறு உள்ளிட்ட பல வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரதனை காட்டப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை மனமுருகி தரிசனம் செய்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்திச் சென்றனர்....
மேலும் கும்பாபிஷேக விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.