தனி அரசாங்கம் நடத்தும் விளாத்திகுளம்  பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!



பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு !




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையப்பகுதியிலும் மற்றும் மதுரை சாலையில் உள்ள ஒரு வணிக கட்டிடம் என மொத்தம் 164 வணிக கடைகள் உள்ளது, அவ்வாறு உள்ள கடைகளுக்கு மாதம் 1000 முதல் 5000 ரூபாய் வரை வாடகை வசூல் செய்யப்படுகிறது, இதனை கடையை வாடகைக்கு எடுத்த குத்தகைக்காரர்கள் உள்வாடகைக்கு விட்டு  மாதம் 5000 முதல் 20 ஆயிரம் வரை வசூல் செய்து வருகின்றனர்.




164 கடைகளுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக எந்த பராமரிப்பும் செய்யாததால், மழைக்காலங்களில் கட்டிடங்கள் மழை நீர் ஒழுகும் நிலையிலும், ஆங்காங்கே மேற்கூரைகள் சேதம் அடைந்து காணப்பட்டு வருகிறது, வருடம் வருடம் கட்டிடங்களுக்கு பராமரிப்பு பணிக்கு செலவுத்தொகை எடுக்கப்பட்டாலும் எந்தவித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளவில்லை என்று வணிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



அதையும் மீறி கட்டிடங்களை பராமரித்து தருமாறு பேரூராட்சி நிர்வாகத்திடம் வணிகர்கள் கேட்டால் “ இருக்கணும்னா இருங்க  இல்ல கடையை காலி பண்ணி போய்கிட்டே இருங்க ” என்று  அலட்சியமாகவும் ஆணவத்தோடும் கூறுவதாக கூறப்படுகிறது.




விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் உள்ள 164  கடைகளுக்கும் பல ஆண்டுகளாக கடை ஏலம் நடைபெறவில்லை என்றும்,வருடம் வருடம் குத்தகையை நீட்டிக்க அடாவடியாக பணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டு வருகின்றனர். 



குறிப்பாக அரசுக்கு செலுத்த வேண்டிய 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டப்படும் ரசீது தொகைக்காக, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன்ராஜ்,துணைத்தலைவர் வேலுச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை அனுப்பி ஒரு கடைக்கு 12000 முதல் 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் வரை அடாவடியாக வசூல் செய் வசூல் செய்து தங்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக்கொள்வதாக வணிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

அரசு கஜானாவிற்கு 500 முதல் 1000 ரூபாய் வரை மட்டுமே பணத்தை செலுத்தி விட்டு பேரூராட்சி நிர்வாகத்தினர் தொடர் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.




அதேபோல் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் மேற்கூரையில் எந்த ஒரு வித அனுமதியும் இல்லாமல் பாதுகாப்பும் இல்லாமல் அதிக எடை கொண்ட இயந்திரங்களை வைத்து சிறிய வகைகளான தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகிறதாகவும், அவ்வாறு உள்ள இயந்திரத்தின் எடை தாங்காமல், கட்டிடம் முழுவதும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



லஞ்ச,லாவண்யம்,ஊழல் இல்லாத தூய ஆட்சி என்று மார்பு தட்டிக் கொள்ளும் தற்போதைய தமிழக அரசு, இதுபோல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி கூட்டுக்கொள்ளையில் ஈடுபடும் பேரூராட்சி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.