எட்டையபுரத்தில் இடிந்து விடும் நிலையில் மயான தகன மேடை ; சாலை, கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் பொதுமக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டான R.C.தெருவில் முறையான சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் நாள்தோறும் பெரும் சிரமத்திற்கு இடையில் அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர். அதிலும் முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மேலும், இந்த 3-வது வார்டான R.C. தெருவில், எட்டயபுரம் பேரூராட்சி சார்பில் குப்பைகளை சுத்தம் செய்வதுமில்லை என்ற குற்றச்சாட்டையும் இப்பகுதி மக்கள் வைத்துள்ளனர். இதனை எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் இராமலட்சுமி சங்கரநாராயணன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக முறையான சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் அமைத்து கொடுத்து இந்த பகுதியில் நிலவி வரும் சுகாதார சீர்கேட்டை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, இங்கு அமைந்துள்ள பொது மயானத்தில் தகன மேடையில் கான்கிரட்டுகள் மிகவும் சிதலமடைந்து கம்பிகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இடிந்து விழும் நிலையில் இருந்து வரும் இந்த தகன மேடையில் இறந்தவர்களின் உடல்களை உயிர் பயத்துடனே உறவினர்கள் தகனம் செய்து வருவதாக கூறுகின்றனர். ஆகையால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் இந்த பொது மயான தகன மேடையை இடித்து அகற்றிவிட்டு புதிய தகன அமைத்துக் கொடுப்பதோடு, மயானத்திற்கு சுற்றுச்சுவரும் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.