கண்டெய்னர் லாரியில் வந்திறங்கிய தாய்மாமன் சீர் : கேரள செண்டை மேளம் முழங்க... ஆட்டம் - பாட்டத்துடன் வான வேடிக்கை, கலர்ஃபுல் லைட் ஷோ & பேப்பர் ஷாட் என பிரம்மாண்டமாக வலம் வந்த 350 சீர்வரிசை தட்டுகள்... நாகலாபுரத்தில் மாஸ்காட்டிய தாய்மாமன்மார்கள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி - ஆனந்தி தம்பதியினரின் மகளான சபீஷ்னாவிற்கு பூப்புனித நீராட்டு விழா இன்று நாகலாபுரத்தில் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆனந்தியின் உடன்பிறந்த சகோதரர்களான ஓட்டப்பிடாரம் அருகே சங்கரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பவித் குமார் மற்றும் சூர்யா இருவரும் தங்களது மருமகளின் பூப்புனித நீராட்டு விழாவில் தாய்மாமன் முறையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணி... பட்டுச்சேலை, தங்க நகை, வளையல்,  அண்டா, பாத்திரங்கள், இனிப்புகள், பழங்கள் வகைகள் என ஏராளமான பொருட்கள் அடங்கிய 350 தாம்பூல தட்டுகளை நீளமான கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு பட்டாசுகள் வெடித்து, வான வேடிக்கையுடன் கேரளா செண்டை மேளம் முழங்க தனது உறவினர்களுடன் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் நாகலாபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவ்வாறு செல்லும் வழி நெடுகிலும் ஊர் மக்களின் கண்களை கவரும் வகையில் COLOURFUL LIGHT SHOW மற்றும் COLOUR PAPER SHOT போட்டு அசத்தியுள்ளனர் இந்த தாய்மாமன் பிரதர்ஸ். வழக்கமாக சீர் என்றாலே மதுரை, தேனி பகுதியைத்தான் குறிப்பிட்டு சொல்வார்கள் என்ற நிலையில் அதற்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை தூத்துக்குடி தாய் மாமன்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இவர்கள் செய்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஆடுகளை கையில் பிடித்துக் கொண்டு சீர்வரிசையுடன் வீட்டிற்கு வந்த தாய்மாமன்மார்களுக்கு பாத பூஜை செய்து, மாலையிட்டு ஆரத்தி எடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர் ஆசைத்தம்பி - ஆனந்தி தம்பதியினர்... பின்னர், தங்களது மருமகளுக்கு சடங்குகள், சம்பிரதாயங்களை செய்த தாய்மாமன்கள் சபீஷ்னாவிற்கு தங்க செயின் அணிவித்து தங்களது உரிமையை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக செய்த அசத்தினர்... பெரும்பாலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் தாய்மாமன் மார்கள் மேளதாளங்களுடன் சீர்வரிசை எடுத்துச் செல்வதை மட்டுமே கண்ட இப்பகுதி மக்கள் கண்டெய்னர் லாரியில் சீர்வரிசை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக கொண்டு சொல்லப்பட்டதை வியப்புடன் பார்த்து ரசித்தனர்... 

இன்றைய நவீன காலத்தில் நாளுக்குநாள் கலாச்சாரமும், தமிழரின் பாரம்பரியமும் மறைந்து கொண்டே வரக்கூடிய சூழ்நிலையில் இன்றளவும் இது போன்ற ஒரு சில நிகழ்ச்சிகள் மூலமாக ஆங்காங்கே தமிழரின் பண்பாடு மேலோங்கி காணப்படுகிறது. அந்த வகையில் நாகலாபுரத்தில் இன்று  தாய்மாமன்கள் தனது மருமகளுக்கு 350 தாம்பூல தட்டுகளில் சீர் கொண்டு சென்றது மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

பேட்டி: 

1. பவித் குமார் - தாய்மாமன்