விளாத்திகுளம் அருகே விவசாயிகளை தாக்கிய பன்றியை அடித்து கொன்ற மக்கள்: தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை விவசாயிகள் கொந்தளிப்பு !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் காட்டுப்பன்றி தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகள் தற்போது விவசாயிகளையும் தாக்கத் தொடங்கியுள்ளது. விளாத்திகுளம் அருகே அயன் கரிசகுளம் பகுதியில் மோகன்ராஜ் என்ற விவசாயி தனது நிலத்தை பார்ப்பதற்காக சென்றபோது , காட்டுப்பன்றி ஒன்று பயிர்களை சேதப்படுத்தியதை பார்த்து சத்தம் போட்டு உள்ளார். அதேபோன்று அருகில் உள்ள விவசாய நிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சண்முகராஜ், ராமசாமி ஆகியோரும் காட்டு பன்றியை பார்த்து சத்தம் போட்டு விரட்ட முயன்றுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த காட்டுப்பன்றி மூன்று பேரையும் தாக்கி உள்ளது. இதில் விவசாயி மோகன்ராஜ் க்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சண்முகராஜ்,ராமசாமி இருவரையும் கை மற்றும் உடல் பகுதியில் கடித்து குதறி விட்டு காட்டுப்பன்றி தப்பி ஓடிள்ளது. இதில் காயம் அடைந்த மூன்று பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் விவசாயிகளை தாக்கிய அந்த காட்டுப்பன்றியை அப்பகுதி பொதுமக்கள் துரத்திச் சென்று அடித்து கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாதத்துக்குமுன் புதூர் அருகே கம்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் விவசாயி அய்யரப்பன் என்பவரை காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இப்போது, 3 பேரை காட்டுப்பன்றி தாக்கி படுகாயம் அடைய செய்திருப்பது அப்பகுதி விவசாயிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானாவாரி பயிர்கள் நன்கு செழித்து வளர்த்துள்ளது. இதனால், பயிர்களுக்கு களை எடுத்தல், உரமிடுதல், பூச்சுக் கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், வயலுக்கு வரும் விவசாயிகளை காட்டுப் பன்றிகள் தாக்கி வருவாதலும், பயிர்களை நாசப்படுத்தி வருவதாலும் விவசாயிகள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.
கடந்த 2019ம் ஆண்டு முதல் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களை பெரும் சேதப்படுத்தி வருகிறது. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும், விவசாயிகளுக்கு துணையாக நிற்கவேண்டிய தமிழக அரசு நிர்வாகமோ... அதிகாரிகளோ... எங்களை கண்டுகொள்ளவில்லை. இப்போது, காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வயல் பகுதிகளுக்கு செல்லும் விவசாயிகளையும் தாக்கி வருகிறது. பயிர்களை சேதப்படுத்தி, விவசாயிகளையும் அடுத்தடுத்து தாக்கி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆனாலும், மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என்று கடும் கோபமடைந்திருக்கிறார்கள் விவசாயிகள்.
காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களுக்கும் நிவாரணம் கேட்டு சென்றால், மான்களால் சேதமானால்தான் நிவாரணம் வழங்க முடியும் என்று தட்டிக் கழிக்கின்றனர் வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகள்.