விளாத்திகுளம் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி : பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றதில் சென்னை, கோவில்பட்டி அணிகள் சாம்பியன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில், "லியா கைப்பந்து கழகம்" மற்றும் கனரா வங்கி சார்பில், 20-ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 3 தினங்களாக நடைபெற்று வந்தது. இப்போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி கனரா வங்கியின் உதவி பொது மேலாளர் நாகப்ப வெங்கப்ப அப்பர் சார்பாக படர்ந்தபுளி கிளை மேலாளர் காந்தி தேவி, எட்டையபுரம் வட்டாட்சியர் சுபா, மாவட்ட கைப்பந்தாட்ட கழகச் செயலாளர் ரமேஷ்குமார், இந்திய கைப்பந்து வீரர் ஜெயபால், நடந்த புளி தலைமையாசிரியை பானுமதி, கிராம நிர்வாக அலுவலர் ஜான்சி பேபி, வட்டார கோவில்பட்டி வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மகேஷ், தொழிலதிபர் பொன்ராஜ் மற்றும் கைப்பந்தாட்ட கழக உறுப்பினர்கள் மாரிக்கண்ணன், செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்போட்டியில் சென்னை, திருநெல்வேலி, ஓசூர், ஒட்டன்சத்திரம், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 27-க்கும் மேற்பட்ட ஆண்கள் அணியினரும், 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அணியினரும் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் கோவில்பட்டி அணியினரும் - ஒப்பில்லான் மோதியதில் கோவில்பட்டி அணியினர் வெற்றிப்பெற்றனர். அதேபோன்று பெண்கள் பிரிவில் சென்னை அணியினரும் - மதுரை அணியினரும் மோதியதில் சென்னை அணியினர் வெற்றி பெற்றனர். பின்னர் இப்போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு லியா கைப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் பரிசுத்தொகை மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு ரசித்தனர்.