எட்டயபுரத்தில் ஸ்ரீலஸ்ரீ சுப்பையா சுவாமிகளின் 55-ம் ஆண்டு குருபூஜை சிறப்பாக நடைபெற்றது : ஏராளமான பக்தர்கள் வழிபாடு !


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் 1896-ம் ஆண்டு செங்குந்த முதலியார் சமுதாயத்தில் பிறந்தவர் சுப்பையா. இவர் நாகலிங்கஜோதி என்பவரை குருவாக ஏற்று கொண்டு திருமணம் புரியாமலே தன்னுடைய தெய்வ அருளால் இப்பகுதியில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு மருத்துவம் செய்து வாழ்ந்து வந்தார். 1969-ம் ஆண்டு தன்னுடைய 73-ம் வயதில் உட்கார்ந்திருந்தபடி, தியான நிலையில் உயிர் பிரிந்ததை தொடர்ந்து எட்டயபுரம் நடுவிற்பட்டி செங்குந்தர் நடுநிலைப் பள்ளி அருகே இவருக்கு உட்கார்ந்த நிலையிலேயே உப்பு மற்றும் திருநீர் கொண்டு சமாதி அமைக்கப்பட்டது. பின் இந்த சமாதி மீது  இவருடைய குருநாதரான லிங்க மேனியை பிரதிஷ்டை செய்து கோவிலாக கட்டி இப்பகுதி மக்கள் தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். 

மேலும் ஒவ்வொரு ஆண்டும் இங்கு சுவாமிகளின் குருபூஜை விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஸ்ரீலஸ்ரீ சுப்பையா சுவாமியின் 55-ம் ஆண்டு குருபூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. 

குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று காலை கோவிலில் அமைந்துள்ள விநாயகர், முருகன் சிலைகளுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் ஸ்ரீ சுப்பையா சித்தர் சுவாமிகளுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், உள்ளிட்ட 16  வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பல வகையான மலர்களால் சுவாமிக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 

ஏராளமான பக்தர்கள் இந்த குருபூஜையில் கலந்து கொண்டு சுவாமிகளின் ஆசிபெற்று, கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் உணவருந்திச் சென்றனர்.