விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், காவல்துறை மற்றும் அரசு அலுவலர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் துறை மண்டல அலுவலர்கள், மண்டல உதவியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் காவல் உதவி  ஆய்வாளர்களுக்கு தேர்தலில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், வாக்கு இயந்திரத்தை கையாளும் முறைகள், தேர்தல் தினத்தன்று பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பயிற்சியில் மண்டல அலுவலர்களுக்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மண்டல அலுவலர்களின் பணிகள் தொடர்பாக விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் விளக்க உரையாற்றி பயிற்சி அளித்தனர். இந்த சிறப்பு பயிற்சியில் விளாத்திகுளம்  தொகுதியில் உள்ள 260 வாக்குச்சாவடிகளும் 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 25 மண்டல அதிகாரிகள், 25 மண்டல உதவியாளர்கள், 25 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் என அனைவருக்கும் தேர்தல் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.