தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாமல் ஒரே ஒரு பணியாளரை கொண்டு இயங்குவதால் இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் மணிக்கணக்கில் இங்குள்ள ஆதார் சேவை மையத்தில் தரையில் அமர்ந்து, குடிப்பதற்கு குடிநீரும் இல்லாமல் காத்துக்கிடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விளாத்திகுளம் தாலுகாவில் செயல்பட்டு வரும் ஒரே ஒரு ஆதார் சேவை மையம் என்பதால் தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்யவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யவும் வருகை தரும் நிலையில் இங்கு போதிய பணியாளர்கள் இல்லாமல் ஒரே ஒரு பணியாளரை கொண்டு ஆதார் சேவை மையம் இயங்குவதால் பொதுமக்கள், மாணவர்கள், கைக்குழந்தையுடன் பெற்றோர்கள் என அனைவரும் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதிலும் பெரும்பாலான நேரங்களில் "நெட் கிடைக்கவில்லை" எனக் கூறி பல மணிநேரம் ஆதார் சேவை மைய பணியாளர் சென்றுவிடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலை 7 மணி முதலே இங்கு வந்து நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்றும்... பணியாளர் பற்றாக்குறை மற்றும் மெத்தனப்போக்கு காரணமாக தங்களது ஆதாரில் திருத்தம் செய்யாமலேயே திரும்பிச்சென்று 3 வரை நாட்கள் வரை மாறிமாறி இங்கு வந்துதான் திருத்தம் செய்து செல்வதாக வேதனையுடன் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தராததால் சேவை மையத்தின் வாசலில் தரையில் அமர்ந்து கொண்டு, குடிப்பதற்கு குடிநீரும் இன்றி ஆதாரில் திருத்தம் செய்ய நீண்ட நேரமாக இருந்து அவதியுற்று வருகின்றனர்.
ஆகையால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, உடனடியாக விளாத்திகுளம் ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவல நிலையை மாற்ற போதுமான பணியாளர்கள் நியமிப்பது மட்டுமின்றி பொதுமக்களுக்கு இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.