விளாத்திகுளம் அருகே மாயமான பள்ளிச் சிறுவனை 4 நாட்களுக்குப் பின் மீட்ட தனிப்படை போலீசார்!
கடந்த 4 நாட்களுக்கு முன்பு விளாத்திகுளம் அருகே உள்ள கருப்பசாமி கோவில்பட்டி தெற்கு முத்துலாபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு ஆனந்த்ராஜ் பேரிலோவன்பட்டிக்கு பள்ளிக்குச் சென்றபோது மாயமானதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக சிறுவனை தேடி வந்த நிலையில் இன்று தனிப்படை போலீசார் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை பத்திரமாக மீட்டு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தெற்கு முத்தாலபுரம் என்ற கருப்பசாமி கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி என்பவரது மகன் ஆனந்தராஜ் (15). பேரிலோவன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தி.வெ.அ. நல்லழகு நாடார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியிலிருந்து ஊருக்கு வரும் வேன் மூலமாக பள்ளிக்கு சென்று படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (04.01.2025) பள்ளிக்குச் சென்ற ஆனந்தராஜ் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் பள்ளிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை என இரண்டு நாட்களும் ஆனந்த் ராஜ் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து ஆனந்தராஜ் பெற்றோர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து பள்ளி அமைந்துள்ள பேரிலோவன்பட்டி மற்றும் சிறுவனின் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் சிறுவன் குறித்து விசாரணை கொண்டு, காணாமல் போன தினத்தன்று பேரிலோவன்பட்டி கிராமத்திலிருந்து கலர் சட்டை அணிந்து கொண்டு பஸ்ஸில் ஏறி சென்றதை பார்த்த நபர்கள் தகவல் கூறியதையடுத்து அங்கிருந்து விசாரணை தொடங்கிய போலீசார் கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட இடங்களில் சிறுவனை தேடி வந்த நிலையில் இன்று கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகில் சுற்றித்திரிந்த சிறுவன் ஆனந்தராஜை போலீசார் அடையாளம் கண்டு சிறுவனை பத்திரமாக எட்டையபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சிறுவனிடம், "இதுபோன்று பெற்றோரிடம் சொல்லாமல் எங்கும் செல்லக்கூடாது.." என்று அறிவுரை கூறிய போலீசார் சிறுவனை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.