விளாத்திகுளம் அருகே அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
அங்கன்வாடியில் முறையான பராமரிப்பு இல்லை என்று பெற்றோர்கள் குற்றச்சாட்டு...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது இந்த அங்கன்வாடி மையத்திற்கு 20 குழந்தைகள் தினம் தோறும் வருவது வழக்கம்,இங்கு சொர்ணமாரி என்பவர் ஊழியராக பணி செய்து வருகிறார்.
பொதுவாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள் புதன் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு முட்டை வழங்குவது வழக்கம்,1 வயதிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று பச்சை முட்டைகளை பெற்றோரிடம் வழங்குவதும்,மற்ற குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் முட்டையை உணவுடன் சேர்த்து அவித்து வழங்குவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று திங்கள்கிழமை 20-07-2026 ஒரு வயது உடைய குழந்தையின் பெற்றோரிடம் அங்கன்வாடி ஊழியரான சொர்ணமாரி மூன்று முட்டைகளை வழங்கியுள்ளார், அந்த முட்டைகளில் ஒரு முட்டையை இன்று அந்த குழந்தையின் பெற்றோர் உடைத்துப் பார்த்தபோது, முட்டையில் கோழிகுஞ்சு இறந்து அழுகி நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கோழிக்குஞ்சு உயிரிழந்து அழுகிய நிலையில் இருந்த முட்டையை கையோடு அங்கன்வாடி மையத்திற்கு எடுத்துக்கொண்டு வந்து அங்கன்வாடி ஊழியரான சொர்ணமாரியிடம் காண்பித்தார்,அதற்கு சொர்ணமாரி இது எந்த முட்டையோ என்று அலட்சியமாக பதில் கூறினார்.
இந்தநிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், செய்தியாளர்கள் அங்கு சென்று செய்தி எடுக்க சென்றபோது, முதலில் இந்த முட்டை நாங்கள் கொடுக்கவில்லை என்று கூறிய சொர்ணமாரி பின்பு நாங்கள் தான் முட்டையை கொடுத்தோம் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரிப்பது இல்லை, குழந்தைகளுக்கு எதுவும் சொல்லித்தருவதும் இல்லை, சாப்பாடு முறையாக சுத்தமாக செய்வதும் கிடையாது, முறையான குடிநீர் வசதி இல்லை, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகியுள்ளது,HCL நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட RO குடிநீர் இயந்திரத்தினையும்,LED டிவியும் பயன்படுத்தாமலே பழுதாகி உள்ளது, சிறுவருக்கான விளையாட்டு உபகரணங்களும் பழுதாகி உள்ளது, கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் உள்ளது என பெற்றோர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இதுகுறித்து குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர் பத்மாவதியிடம் கேட்டபோது, அந்த பிரச்சனைக்குரிய முட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் வந்தது பெற்றோர்களிடம் நேற்று திங்கள் கிழமை தான் மூன்று முட்டை கொடுத்தோம் அதில் ஒரு முட்டையை உடைத்துப் பார்த்தபோது இறந்த கோழிக்குஞ்சியுடன் அழுகிய நிலையில் இருந்ததாக வந்த புகாரின் பேரில் நான் விசாரணை மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.