நோய் தொற்று பரவும் அபாயத்தில் பொது கழிப்பிடம்: பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம்:விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு அன்றாட சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், விவசாய இடுபொருட்கள் வாங்குவது சம்பந்தமாக விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.


பொது மக்களுக்கான முறையான இலவச கழிப்பிடம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இல்லையென்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டன, அதனைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு JSW எனும் நிறுவனம் சார்பில் நவீன வசதியுடன் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பிடம் கட்டிக்கொடுக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, முறையான பராமரிப்பு இல்லாமல்,ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கிடப்பதால்,கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது, சுகாதாரமற்ற சூழலால் கழிவறையை பயன்படுத்தும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது, கழிவுநீர் தேங்குவதால் பேருந்து நிலையம் முழுவதும் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது இது பொது மக்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்துகிறது, அதேபோல் சில சமூக விரோதிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பிட அறையில், ஆபாசமான எழுத்துக்களை எழுதுவது,மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்பட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.


அரசுக்கு போதுமான நிதி வசதி இல்லாததால், பொதுமக்கள் நலன் கருதி தனியார் நிறுவனம் கட்டிக்கொடுக்கப்பட்ட கழிப்பிடத்தை  முறையாக பராமரிக்க கூட முடியாமல் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.எனவே அரசு பொதுமக்களின் நலன் கருதி விளாத்திகுளம் பேருந்து நிலைய கழிப்பிடத்தை முறையாக பராமரித்து பொதுமக்களின்  நலன் காக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.