விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக 6 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விளாத்திகுளம் வட்டாரச் செயலாளர் இப்ராகிம் தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளான.....1. தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.2. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் SCERT இயக்குநரின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.3. தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும்.4. எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது.5. காலை உணவுத் திட்டத்தை 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.6. காலை உணவுத் திட்டப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.-உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.