தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் தொடர்ந்து வெறிநாய்களின் தொல்லையால் நூற்றுக்கணக்கான ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த பின்பும் கூட விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவர் அய்யன்ராஜ் வெறி நாய்களை முழுமையாக பிடிக்க எந்தவித அக்கறையும் காட்டாமல் பெயரளவிற்கு நாய்களை பிடிப்பது போல பாசங்கு காண்பித்ததன் விளைவால் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் என பலரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று விளாத்திகுளம் ராஜீவ் நகரில் சிறுவன் உட்பட மூதாட்டிகள் என 3 பேரை மேலும் வெறி நாய்க்கடித்துக் குதறியதில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே, விளாத்திகுளம் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள், பொது கழிப்பிடம் என தொடங்கி எந்தவித அடிப்படை பணியிலும் முறையாக செய்யப்படாமல் பேரூராட்சி நிர்வாகத்தினர் மிகவும் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அம்பாள் நகர் பூங்காவில் பேரூராட்சியின் அதீத அஜாக்கிரதையின் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது. அதிலேயே விளாத்திகுளம் பேரூராட்சியின் நிர்வாகமும், பேரூராட்சித் தலைவர் அய்யன்ராஜின் செயல்பாடும் தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் தெரிய வந்தது என்றே சொல்லலாம்... அது மட்டுமன்றி விளாத்திகுளத்தை பொருத்தமட்டில் சமீபகாலமாக வெறிநாய் தொல்லைகள் அதிக அளவில் இருப்பதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியானதும், பொதுமக்கள் ஏராளமானோர் நாய்க்கடிக்குள்ளானதுதான் மிச்சம்... ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ் மற்றும் துணைத் தலைவர் வேலுச்சாமி பார்வையிலே சென்று போட்டோவிற்கு போஸ் மட்டும் கொடுத்து வருவது தான் பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாடாக இன்றளவும் இருந்து வருகிறது.
பேரூராட்சி தலைவர்கள் தான் இவ்வாறென்றால் செயல் அலுவலரும் நாய்களை முழுமையாக பிடித்து அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்துப்பாடில்லை. இந்த அளவுக்கு சீர்கெட்டு அலட்சியமாக செயல்பட்டு வரும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்காணிக்க வேண்டிய பேரூராட்சிகளின் உதவி இயக்குநரும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் விளாத்திகுளம் என்ற ஊரையே மறந்து விட்டார்களா? என்ற கேள்வி எழுகிறது.
ஆகையால் நாளுக்கு நாள் மிகவும் அசாதாரணமான மற்றும் ஆபத்தான சூழ்நிலைக்கு சென்று கொண்டே இருக்கும் விளாத்திகுளம் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை தடுக்க உடனடியாக தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா ஐ.ஏ.எஸ் விளாத்திகுளம் பேரூராட்சியை கவனத்தில் கொண்டு மிகவும் அலட்சியமாக செயல்பட்டு வரும் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ் மற்றும் செயல் அலுவலர் சுந்தரவேல் மீது நடவடிக்கை எடுத்து பதவிகளை பறிப்பதோடு பேரூராட்சியை சீரமைக்க வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.