விளாத்திகுளம் தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கம் சார்பில், அதிக மதிப்பெண் பெற்ற 10 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுக்கா தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில், இன்று விளாத்திகுளம் பகுதியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தனர். அதன்படி, கடந்த 2024-2025 கல்வியாண்டில் விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற 10-ம் வகுப்பு மாணவிகள் மோனிகா, யாழினி சோபியா, பவித்ரா ஆகியோருக்கும், அதேபோன்று 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பிரதீபா, அரிகரன், முத்துமனிஷா உள்ளிட்டோருக்கும் பரிசுத்தொகையாக ரூ.15,000, ரூ.12,000 மற்றும் ரூ.10000 முறையே விளாத்திகுளம் தேவேந்திர குல வேளாளர் நல சங்கம் சார்பாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், சென்னை ரிசர்வ் வங்கி உதவிப் பொது மேலாளர் அன்பரசு, விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன், தொழிலதிபர் ரஞ்சித் குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குருநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாக்கண்ணு மற்றும் கற்பகம் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களது உயர் கல்விக்கு உதவும் விதமாகவும் பரிசுத்தொகைகளை மாணவர்களுக்கு வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், உயர் கல்விக்கான ஆலோசனைகள் பற்றியும் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். இதில் விளாத்திகுளம் தாலுகாவைச் சேர்ந்த ஏராளமான தேவேந்திர குல வேளாளர் சமுதாய நலச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.