எட்டையாபுரம் அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளை இருப்பு வைத்தது மற்றும் தொழிற்சாலையில் சல்ஃபர் அளவுகள் மாறுபாடு இருந்ததால் ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மாசர்பட்டி கிராமத்தில் TESCO FIREWORKS என்னும் பட்டாசு ஆலை கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது.
செயல்பட்ட வந்த இந்த ஆலையில் அதிக அளவில் பட்டாசுகளை இருப்பு வைத்தல், வெடிப்பொருட்கள் தயாரிக்கும் சல்ஃபர் அளவுகள் மாறுபட்டு இருப்பதாக அடிக்கடி வெடிபொருட்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் சென்று வந்த நிலையில், நேற்று இரவு அந்த பட்டாசு ஆலையில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை, தொழிலகபாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
நடைபெற்ற ஆய்வின்போது பட்டாசு தொழிற்சாலையில் இரண்டு கண்டெய்னர்கள் மற்றும் ஒரு கட்டிடத்தில் சட்ட விரோதமாக பட்டாசுகளை இருப்பு வைத்திருந்ததும்,அதேபோல் சல்ஃபர் அளவுகளில் மாறுபாடு இருப்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து எட்டையாபுரம் வட்டாட்சியர் ஜெயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் இரண்டு கண்டெய்னர் லாரிகள் மற்றும் 60 x 24 அடி அளவுள்ள அனுமதி பெறாத கட்டிடம் மற்றும் ஷோரூம்,சல்ஃபர் ரூம் ஆகியவற்றிற்கு தனித்தனியாக சீல் வைத்தனர், பின்னர் தொழிற்சாலையையும் முழுமையா பூட்டி சீல் வைத்தனர், இதனால் அப்பகுதியில் பெரும் வெடி விபத்து அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.