விளாத்திகுளம் அருகே "பெண் வார்டு உறுப்பினர் கிட்ட கையெழுத்து வாங்கமாட்டீர்களா...?" : கிளார்க் மீது பணம் கையாடல் புகார் : களேபரமான கிராமசபைக் கூட்டம்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பெண் வார்டு உறுப்பினர் சாந்தி என்பவரிடம் ஊராட்சியில் நடைபெறும் செலவினங்கள் குறித்து எதுவும் முறையாக தெரியப்படுத்துவதில்லை என்றும், தனது வார்டுக்கு அடிப்படை பணிகள் எதுவும் செய்து கொடுப்பதில்லை என்றும், தீர்மான பதிவேடுகளில் அவரது கையெழுத்தை ஊராட்சி செயலர் செல்லப்பாண்டியே போலியாக போடுவதாகவும் புகாரை எழுப்பினார். இதனால் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் பெண் வார்டு உறுப்பினர் சாந்தி, உடனடியாக தீர்மான பதிவேடுகளை அனைவரின் முன்பாக ஊராட்சி செயலர் செல்லப்பாண்டி காட்ட வேண்டும் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம சபைக் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கமலாபுரம் ஊராட்சி செயலர் செல்லப்பாண்டியை பதிவேடுகளை எடுத்து வந்து காட்டும்படி கூறியும் கமலாபுரம் ஊராட்சி செயலர் செல்லப்பாண்டி அமைதி காத்து வந்தது அனைவருக்கும் கூடுதலாக சந்தேகத்தை கிளப்பியது. அதுமட்டுமின்றி கமலாபுரம் கிராமத்தில் தற்போது நடைபெற்று வரும் கால்வாய் கட்டுமான பணி சரியான பாதையில் அமைக்கப்படவில்லை, சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு குறைகளை கையில் எடுத்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரையும், ஊராட்சி செயலரையும் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.... இதனால் அமைதியாக நன்முறையில் நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டம் பெரும் களேபரமானது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், வார்டு உறுப்பினர்களுக்கே தெரியாமல் ஊராட்சியில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகிய இருவரையும் பதவி நீக்கம் செய்வதோடு மட்டுமின்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கமலாபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.