கடந்த (16.03.2024) சனிக்கிழமையன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில், வருகின்ற 2024 மக்களவைத் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 2024 ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தவிருப்பதாகவும், அதிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தினர். மேலும் தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது மட்டுமின்றி, அரசியல் கட்சிகளுக்கும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதே சமயம் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 702 பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட (தூத்துக்குடி - மதுரை) தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேலக்கரந்தை சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக வாகனச் சோதனையில் ஈடுபட்டு வாகனம் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது, ஓட்டுநரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வாகனத்தை முழுமையாக சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.