விளாத்திகுளம் அருகே "சர்வதேச யோகா தினத்தை" முன்னிட்டு வனத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் "யோகா சின்னம்" வடிவில் நின்று அசத்திய நூற்றுக்கணக்கான மாணவர்கள்!



சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூரில் அமைந்துள்ள மரகத பூஞ்சோலை என்ற வனத்துறைக்கு சொந்தமான பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகளுக்கு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன் (இந்திய வனப் பணி) உத்தரவின் பேரில், சர்வதேச யோகா தினமான ஜூன் 21-ஆம் தேதி இன்று "YOGA FOR ONE EARTH.. YOGA FOR ONE HEALTH" -எனும் தலைப்பில் விளாத்திகுளம் வனச்சரகம் சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு யோகா பயிற்சியில் விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கனிமொழி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடம், யோகாவின் முக்கியத்துவம் பற்றியும், இயற்கை மற்றும் மரங்களின் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றி யோகா பயிற்சிகளை கற்பித்தார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் யோகா சின்னம் வடிவில் நின்று யோகாசனங்கள் செய்து அசத்தியுள்ளனர். விளாத்திகுளம் வனச்சரக அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனவர்கள் பாண்டியராஜ், கந்தசாமி, பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.