தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர்-சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளங்காமணி என்பவரின் மகன் மாரியப்பன் (28) கோயம்புத்தூரில் பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த பெண் வீட்டார் அப்பெண்ணிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து நாளை மறுநாள் (21.08.2023) திருமணம் நடைபெற உள்ள நிலையில், நேற்று (18.08.2023) மாரியப்பன் கோயம்புத்தூரில் இருந்து கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மாரியப்பன் அக்கிராமத்தில் உள்ள பனங்காட்டுப் பகுதியில் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கிராமத்தினர் குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் இளைஞர் மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மாரியப்பனின் கொலைக்கு காதல் விவகாரம்தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில், குளத்தூர் காவல் நிலைய போலீசார் மாரியப்பன் காதலித்து வந்த பெண்ணின் தந்தை, திருமணம் செய்யவிருக்கு மணமகன் உட்பட மாரியப்பனின் நண்பர்கள் என சிலரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.