விளாத்திகுளம் அருகே 12 பள்ளி மாணவி கொலை - ஒருவரிடம் தீவிர விசாரணை : 6 வது நாளாக உடலை வாங்க மறுத்து வரும் குடும்பத்தினர்...
துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த 10 ம் தேதி திடீரென மாயமானார். மறுநாள் அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் களைந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
குளத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக கலெக்டர் இளம்பகவத் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், கொலை நடந்து 6 நாட்களை கடத்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் போலீசார் மீது மாணவி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வழக்கு விசாரணை தொடர்பாக சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் துாத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.
இதற்கிடையே, கொலையாளிகள் குறித்த எந்தவித தகவலும் கிடைக்காத நிலை நீடித்து வருவதால் போலீசார் திணறி வருகின்றனர்.
மாணவி கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 20 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதலில் கிராம மக்கள் ஒத்துழைப்பு தர மறுத்த நிலையில், தற்போது ஒவ்வொரு வீடாக நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
மாணவியிடம் நெருக்கமாக பழகிய தோழிகள், சக மாணவர்களிடம் விசாரணை நடத்த முடியாத நிலை இருந்து வருகிறது. விசாரணைக்கு செல்லும் போலீசாரிடம் அவர்களின் பெற்றோர் அடிக்கடி வர வேண்டாம் என ஒத்துழைக்க மறுக்கின்றனர். வட மாநில தொழிலாளர்கள், வெளியூர் நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம்.
இருப்பினும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை. கிராமப்பகுதி என்பதால் சிசிடிவி கேமரா காட்சிகள் ஏதும் சிக்கவில்லை. மாணவி பயன்படுத்திய மொபைல் போல், அவரது தோழிகள் மற்றும் சக மாணவர்களின் மொபைல் போனை ஆய்வு செய்தபோதிலும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
காட்டுப் பகுதியில் இயற்கை உபாதைக்கு செல்லும் பெண்களிடம் இதற்கு முன் ஏதேனும் தாக்குதல்கள் நடந்துள்ளதா? பாலியல் ரீதியான தொந்தரவுகள் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில் தற்போது சந்தேகத்தின் பேரில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிக்கியுள்ளார்.
இருப்பினும், சம்பவம் நடந்த நாளில் அவர் காட்டுப் பகுதியில் இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் ஓரிருநாளில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் இன்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என குடும்பத்தினர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மாணவியின் கொலை சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகிறது. கொலையாளிகளை விரைவில் கைது செய்யப்படாவிட்டால் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 27 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை காவல் துறையினர் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர்
இதைத்தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அந்த நபரை மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்
மருத்துவ பரிசோதனை மூலம் மாணவியின் உடலில் இருந்து கிடைத்த தடயங்கள் மூலம் விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட நபர்களின் ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை ஒத்துப் போகிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று காவல்துறை நடவடிக்கை குறித்து விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் காவல்துறையினர் இந்த கொலை வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தகவல்களை தெரிவிக்க இருக்கின்றனர்.
தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாததை தொடர்ந்து ஆறாவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.