விளாத்திகுளம் அருகே தென்னிந்திய அளவிலான ஆண், பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி - டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் கொடை விழா மற்றும் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. லீக் ஆட்ட முறையில் நடைபெற்ற இப்போட்டியில், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை, ஒட்டன்சத்திரம், ஈரோடு, அந்தியூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் இப்போட்டியை டாஸ் போட்டு கபடி வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தென்னிந்திய அளவிலான பெண்கள் கபடிப்போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் இரு அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தை பார்வையாளர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார். குளத்தூரில், கோவில் கொடை விழாமேடை முன்னிட்டு நடைபெற்ற இந்த தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டியை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மேலும் 3 நாட்கள் நடைபெறவுள்ள  இப்போட்டிக்கான இறுதி ஆட்டமானது நாளை நடைபெறும் என்றும், அதன்பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பை வழங்கப்படும் என்றும் விழாக்கமிட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.