விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண வைபவம் : ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த 20-ம் தேதி  கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்,விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக ஸ்ரீ மீனாட்சிஅம்மன் சுந்தரேஸ்வரர் சர்வ அலங்காரங்களுடன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த  மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்தும், வேதமந்திரங்கள் பாடி மாலைகளை மாற்றிக்கொண்ட பின்னர் சுந்தரேஸ்வரர் சுவாமியிடம் இருந்து பெற்ற திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தனர்,அதே நேரத்தில் கோவிலில் திரண்டு இருந்த ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தை மாற்றிக்கொண்டனர்,பின்னர் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு தீபாதாரணை நடைபெற்றது. இந்நிகழ்வில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  திருக்கல்யாண வைபவத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திரு தேரோட்டம்,மற்றும் நாளை மறுநாள் பொன்னூஞ்சல் வைபவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.