எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் நாட்டுப்புற கலைகளின் கலைச்சங்கமம் நிகழ்ச்சி!
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கலைச்சங்கமம் என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் கடந்த 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கடைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதையெடுத்து கரகாட்டம் ஒயிலாட்டம் கும்மியாட்டம் தேவராட்டம் என அனைத்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. நாட்டுப்புற கலைஞர்கள் ஆடி அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இந்த கலைச்சங்கமம் நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.