தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி - சோலையம்மாள் தம்பதியினரின் மகனான சரவணக்குமார்(24) லோடு ஆட்டோ டிரைவராக பணிபுரிவந்துள்ளார். இவருக்கும் ஜெயசூர்யா என்பவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் தனது உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக நண்பருடன் வில்வமரத்துப்பட்டி கிராமத்திற்கு சென்றுவிட்டு மாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பெருநாழி விலக்கு அருகில் எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில்  சரவணக்குமார் கால் சிதைந்து படுகாயமடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் பணி மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் சரவணக்குமாரின் குடும்பத்தினர் அவரை திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து விபத்தில் சிதைந்த காலை சரிசெய்ய ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி அறுவைச் சிகிச்சை செய்தும் அவரது காலை வெட்டி அகற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் சரவணக்குமார். மேலும், திருமணமாகி 6 மாதங்கள் கூட ஆகாத சரவணக்குமார் விபத்தில் அவரது காலை இழந்த சம்பவம் அவரது மனைவி ஜெய சூர்யா உட்பட மொத்த குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே, மிகச்சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டு அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்தி வந்த சரவணக்குமாரின் குடும்பத்தில் தற்போது அவரும் தனது காலை இழந்து வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் குடும்பத்தினர் அன்றாட செலவிறக்கே பெரும் அவதியுற்று வருகின்றனர். அதிலும் மாற்றுத்திறனாளி சரவணக்குமாருக்கு மருத்துவச்செலவிற்காக வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு தற்போது இவர்கள் வாழ்ந்துவரும் சிறிய வீட்டையும் விற்க வேண்டிய சோகமான நிலையில் உதவி செய்ய யாருமின்றி தவித்து வருகின்றனர்.  அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளி சரவணக்குமாருக்கு தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் அட்டையும்,  பாஸ்புக் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது....ஆனால் தற்போது வரை அவருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வாகனம், தொழிற்கடன் போன்ற எந்தவொரு உதவியும் அரசு சார்பில் செய்யப்படவில்லை என்பதே நிதர்சனம்... மேலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்காக பலமுறை விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனு மீது விசாரணை நடத்தக்கூட வரவில்லை என்று கூறுகின்றனர். எனவே உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விபத்தில் சிக்கி காலை இழந்து வறுமையில் தவிக்கும் மாற்றுத்திறனாளி சரவணக்குமாருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதோடு அவருக்கு மாற்றுத்திறனாளிகள் வாகனமும், சுய தொழில் துவங்க கடனுதவியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் மாற்றுத்திறனாளி சரவணக்குமாரும், அவரது குடும்பத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.(குறிப்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலான சாலை அமைக்கும் பணிகளின் போது சாலையின் இருபுறமும் முறையாக மண் போடப்படாமல் இருப்பதுதான் இதுபோன்ற ஏராளமான விபத்துக்களுக்கு காரணமாக விளங்குகிறது என்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதனையும் துறைசார்ந்த அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது)