வெம்பூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு : அதிகாரிகளின் சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வி!
தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் வருகின்ற மார்ச் 21-ம் தேதி வெம்பூர் கிராமத்தில் பல்வேறு கட்சியினரின் ஆதரவுடன் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று இன்று எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளின் பேச்சில் விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் சமாதான பேச்சு வார்த்தைக் கூட்டம் தோல்வி அடைந்தது. ஆகையால், வெம்பூரில் வருகின்ற மார்ச் 21-ஆம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்து சென்றுள்ளனர்...