விளாத்திகுளம் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை : முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் செல்லும் வாகனங்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்தாண்டு புரட்டாசி மாதம் துவக்கத்திலேயே ராபி பருவத்திற்காக நிலத்தை உழவு செய்து பாசி, உளுந்து, கம்பு, சோளம், மக்காச்சோளம், மிளகாய், வெங்காயம், உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இந்நிலையில் இன்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது... இதன் தொடர்ச்சியாக  விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில்  செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகனங்களை விட்டு செல்கின்றனர். மேலும், மழையை மட்டுமே நம்பி பயிர் செய்து பல நாட்களாக மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் இன்று பெய்த கனமழையால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.