1 மாதமாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர் : பாலியல் குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறும் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை...!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் 6 முதல் 12ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த விளாத்திகுளத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மகனான தியாகராஜன் என்ற ஹென்றி,  பள்ளியில் 12-ம் வகுப்பு வேளாண்மைப்பிரிவு மாணவிகளை கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதியன்று (13.10.2025) புதூர் அருகே உள்ள சென்னமரெட்டிபட்டி கிராமத்திற்கு புள்ளியியல் செயல்முறை பயிற்சிக்காக விவசாய நிலத்திற்கு (FIELD VISIT) அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மாணவிகளுடன் சென்ற ஆசிரியர் தியாகராஜன் என்ற ஹென்றி, 12-ம் வகுப்பு மாணவியின் அந்தரங்க உறுப்புப்பகுதியில் கைவைத்து, ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சியடைந்து காமக்கொடூரனின் கையை தட்டி விட்டு ஓடிச்சென்று தன் தோழிகளிடம் அழுது கொண்டே நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது பிற மாணவிகளும் தங்களுக்கும் இதே போன்று ஆசிரியர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் பள்ளிக்கு வந்த பின் தனது வகுப்பு ஆசிரியையிடம் மாணவிகள், இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறியுள்ளனர். இதைக் கேட்ட வகுப்பாசிரியர் மாணவிகளுடன் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்னை சீபா ஃபிளவர் லெட்-யிடம் புகார் கூறிய நிலையில், அதனை பெண் தலைமை ஆசிரியர் சிறிது கூட பொருட்படுத்தாமல் "இதெல்லாம் சகஜம்தான்.. பெருசு படுத்தாதீங்க... நம்ம பள்ளியின் பெயர் கெட்டுப் போயிடும்.. போங்க, போங்க..." -என்று மிகவும் அலட்சியமாக பதில் கூறி திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.


பின், இது பற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்து... விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் காமக்கொடூரன் ஆசிரியர் தியாகராஜன், தங்களுக்கு கொடுத்த பாலியல் தொல்லைகள் பற்றி மாணவிகள் புகார் அளித்தனர். மாணவிகளின் புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு, மாணவிகளின் புகாரை அலட்சியப்படுத்திய பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர் அன்னை சீபா ஃபிளவர் லெட் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மற்றும் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெண் தலைமை ஆசிரியை அன்னை சீபா ஃப்ளவர் லெட் ஆகிய இருவரையும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


மேலும், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் என்ற ஹென்றி தலைமறைவான நிலையில், 2 தனிப்படைகள் அமைத்து காமக்கொடுரன் ஆசிரியரை, போலீசார் கடந்த 1 மாதமாக தேடி வரும் நிலையில் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என்பது பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தலைமறைவான பாலியல் குற்றவாளி தியாகராஜனின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்ட மாணவிகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி பணம் பேரம் பேசுவதாகவும் சொல்லப்படுகிறது. 


தலைமறைவான பள்ளி ஆசிரியர் ஒருவரை பிடிக்க விளாத்திகுளம் டி.எஸ்.பி அசோகன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்தும் 1 மாதமாக குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது காவல் துறை மீது இப்பகுதி மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதூர் பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தமிழக முதல்வர் மற்றும் டிஜிபி இவ்விவகாரத்தில் தலையிட்டு தேடப்பட்டு வருவதாக கூறப்படும் பாலியல் குற்றவாளியான  ஆசிரியர் தியாகராஜனை உடனடியாக கைது செய்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளுக்கு நீதி கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளாத்திகுளம் பகுதி பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் ஒருமித்த குரலாக உள்ளது.