தேர்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள் : உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பணிக்காக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் நேற்று மாலை முதல் வாக்குச்சாவடி மையத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் அவசரகால உதவி அரசு ஊழியர்களான (ரிசவர்) ஊழியர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 110-க்கும் மேற்பட்டோர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்த ரிசவர் அரசு ஊழியர்களுக்கு, நேற்று மாலையிலிருந்து தற்போது வரை முறையான குடிநீர் உணவு உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என்றும்,தற்போது பணி முடிந்த பிறகும் தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்கவில்லை என்றும் தேர்தல் பணிக்காக வந்த அரசு ஊழியர்கள், விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில்,தேர்தல் நடத்தும் அலுவலரான உஷா மற்றும் வட்டாட்சியர் கண்ணன் ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து,அரசு ஊழியர்களுக்கு தேர்தல் ஊதிய தொகை வழங்கப்பட்டது.
அதேபோல் தேர்தல் நடத்தும் துணை அதிகாரி (துணை வட்டாட்சியர்) ஆரோக்கியமணி வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கும், வாக்குச்சாவடியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் முறையான குடிநீர் வசதி கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்றும்,தேர்தல் பணிக்காக தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர்,மணியாச்சி, உடன்குடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்திலிருந்து பயணித்து வாக்குச்சாவடி பணியாற்ற வந்த எங்களை துணை வட்டாட்சியர் ஆரோக்கியமணி பாரபட்சமாக நடத்துவதாகவும் அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.